
The Thavamani Times, Published in 28 June 2026,
திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ஜூலை 5-ம் தேதி விசிக விருதுகள் வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. பேராசிரியர் சொக்கலிங்கத்துக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்க உள்ளோம். எனது பிறந்தநாளான ஆகஸ்ட் 17 தமிழர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அதே நாளில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடத்த உள்ளோம். மாநாடு எங்கு நடைபெறும் என விரைவில் அறிவிக்கப்படும்.
அரசு பொறுப்பில் ஜோதிடரை நியமிக்கக்கூடாது, தூய்மை பணியாளர்கள் தனியார்மயத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்ற தமிழக முதல்வர், அவற்றை கைவிடுவதாக அறிவித்தார். தோழமைக் கட்சிகளின் கோரிக்கைகள், ஆலோசனைகளுக்கு நடவடிக்கை எடுக்கும் முதல்வரின் பாங்கு பாராட்டுக்குரியது.
கடந்த ஆட்சி நிர்வாகத்தில் எவ்வாறு நிதி நிலைமை இருந்தது என்பதை வெளிப்படையாக அறிவிப்பது ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதை உணர்ந்து இந்த அரசு செயல்படுவதாக நம்புகிறேன்; வரவேற்கிறேன்.
நாங்கள் 35 ஆண்டுகளாக தமிழ் தேசியம் பற்றி பேசி வருகிறோம். தமிழ் தேசியம், சாதி ஒழிப்பு, பாட்டாளி வர்க்க விடுதலை, மகளிர் விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவை விசிகவின் ஐம்பெரும் முழக்கங்கள். ஏராளமான தமிழ் தேசிய கருத்தரங்கங்கள், மாநாடுகளை நடத்தி உள்ளோம். அடுத்த பாய்ச்சலாகத்தான் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு முன்னெடுக்கிறோம்.
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பவர் முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவர். அந்தப் பொறுப்பு ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பல்ல. ஆகவே, அந்த பொறுப்பை முதல்வர் நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு வழங்கி உள்ளார் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.








