The Thavamani Times, Published on 02:July 2026
திருவண்ணாமலை ஜூலை 02,
தமிழக அரசு அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தி வரும் டிஜிட்டல் வகுப்பறை (Smart Classroom) திட்டம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. செங்கம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளியிலும் டிஜிட்டல் வகுப்பறை மூலம் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
வகுப்பறையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் இன்டராக்டிவ் டிஸ்ப்ளே, கணினி மற்றும் டிஜிட்டல் கற்றல் மென்பொருட்கள் மூலம் ஆசிரியர்கள் பாடங்களை காட்சி வடிவில் எளிமையாகவும், தெளிவாகவும் விளக்குகின்றனர். இதனால் மாணவர்கள் பாடங்களை ஆர்வத்துடன் கற்று, எளிதில் புரிந்துகொள்வதுடன், நீண்ட காலம் நினைவில் வைத்துக்கொள்ளும் திறனும் அதிகரித்துள்ளது.
கணிதம், அறிவியல், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் படங்கள், காணொளிகள் மற்றும் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்படுவதால் மாணவர்களின் கற்றல் திறன், சிந்தனை திறன் மற்றும் வகுப்பறை பங்கேற்பு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். டிஜிட்டல் வகுப்பறை பயன்பாட்டால் மாணவர்களின் வருகை அதிகரித்து, கற்றலின் மீது ஆர்வமும் மேம்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி வட்டார கல்வி அலுவலர் இராமமூர்த்தி, பிரகாஷ் ஆகியோரின் ஆலோசனையின் பேரில்
இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் திருமதி ஜெயந்தி அவர்களின் தலைமையிலும் வழிகாட்டுதலிலும், ஆசிரியர்கள் வேல்முருகன், சங்கீதா, நாராயணன், அரசு, மெஹரூன்னிசா, பிரதீப், ஆறுமுகம், ராஜாராம், சுதா மற்றும் மேரி ஆகியோர் டிஜிட்டல் வகுப்பறை வசதியை முழுமையாக பயன்படுத்தி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி வருகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தரமான கல்வியை வழங்கி வரும் தமிழக அரசின் இந்த முயற்சிக்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்ததுடன், இதுபோன்ற வசதிகள் மேலும் அனைத்து பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Thavamani Times News Desk