The Thavamani Times :
புதுப்பாளையம் இதயா மகளிர் கல்லூரியில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதுப்பாளையத்தில் அமைந்துள்ள இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில், "மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் டிஜிட்டல் எதிர்காலத்தில் புதிய பரிமாணங்கள்" என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் கல்லூரி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் விமலி தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் அருட்சகோதரி சம்பூர்ணா மேரி வரவேற்புரை ஆற்றினார். நிர்வாக செயலாளர் அருட்சகோதரி சந்தன மேரி முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரி ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் டாக்டர் ஐ. அமல்ராஜ், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களது அறிவையும் திறன்களையும் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். ஆங்கில மொழிப் புலமை, ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் தகவல் பரிமாற்றத் திறன் ஆகியவை இன்றைய உலகில் மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், குடியாத்தம் அரசு திருமகள் மில்ஸ் கல்லூரி ஆங்கிலத் துறையின் விருந்தினர் விரிவுரையாளர் டாக்டர் ஐ. இளையகுமார் பேசுகையில், மொழி, இலக்கியம் மற்றும் பண்பாடு ஆகியவை மனித சமூகத்தின் அடையாளங்களாகும் என்றார். டிஜிட்டல் யுகத்தில் செயற்கை நுண்ணறிவு, இணையவழி கற்றல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் திறம்பட பயன்படுத்தி கல்வி மற்றும் ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
கருத்தரங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆங்கிலத் துறைத் தலைவர் பி.எல். ஆண்டனி சாந்தி செய்திருந்தார்.
இந்த தேசிய கருத்தரங்கில் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பகிரப்பட்டன. பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு கருத்தரங்கின் மூலம் பயனடைந்தனர்.