The Thavamani Times,
திருவண்ணாமலை | 12.07.2026
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலை நகரில் உள்ள ஏ.எஸ்.எம். கிராண்ட் ஹோட்டலில் மாநிலத் தலைவர் எஸ். சங்கரபெருமாள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மா.கு. சதீஷ், மாநில பொருளாளர் என். சுரேஷ்குமார், மாநில செயல் தலைவர் எஸ். செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டு சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் கடந்த ஆண்டின் செயல்பாடுகள், வரவு-செலவு கணக்குகள், உறுப்பினர் சேர்க்கை விரிவாக்கம், மாவட்ட அளவிலான சங்க செயல்பாடுகளை வலுப்படுத்துதல், அரசு பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், உடற்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வு, பணிமாறுதல், பணிநிரந்தரம், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், பள்ளி மாணவர்களின் உடற்திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களின் நலன், மாணவர்களிடையே விளையாட்டு திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் சங்கத்தின் அடுத்தகட்ட பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் நிறைவில், மாநிலத் தலைவர் எஸ். சங்கரபெருமாள் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து, சங்கத்தின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.