Logo
Date of Publish : 18 July 2026, 4:27 pm
Editor : S. Porkodi

ஜவ்வாதுமலையில் 26-வது கோடை விழா கோலாகலம்

ஜவ்வாதுமலையில் 26-வது கோடை விழா கோலாகலம்

ரூ.111.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் – ரூ.65.66 கோடியில் நிறைவு பெற்ற 128 வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு

கலசப்பாக்கம், ஜூலை 19:

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் ஜவ்வாதுமலையில் நடைபெற்ற 26-வது கோடை விழாவை, தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழாவில் ரூ.65.66 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற 128 வளர்ச்சித் திட்டங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டதுடன், ரூ.111.25 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் 27,532 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், ஜமுனாமரத்தூரில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தனா கார்க் தலைமை தாங்கினார். சுற்றுலா மற்றும் தொல்லியல் துறை இயக்குநரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான முனைவர் வி.ப. ஜெயசீலன் மற்றும் போளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர். அபிஷேக் முன்னிலை வகித்தனர்.

விழாவை அமைச்சர்கள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, பல்வேறு அரசுத் துறைகளின் பணி விளக்கக் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, பள்ளிக்கல்வித் துறை, அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் ரூ.65.66 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற 128 திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, பிற்படுத்தோர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் ரூ.111.25 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் 27,532 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

பின்னர் பலாமரத்தூர் கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் திருமணத்தைத் தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்துகொண்டு, குழந்தைத் திருமணத்தின் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து ஜவ்வாதுமலையில் சுற்றுலாத்துறை மேற்கொண்டு வரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், பரமனந்தல்–அத்திப்பட்டு இடையே நடைபெற்று வரும் 38.333 கிலோமீட்டர் சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தனர்.

விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பெண்கள், இளைஞர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பெண்களின் கல்வி, இளைஞர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்குதல், கூடுதல் பள்ளிகள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறை போன்ற சமூகத் தீமைகளை முற்றிலும் ஒழிக்க அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் பேசுகையில், ஜவ்வாதுமலை கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இயற்கை வளம், பழங்குடியினர் பாரம்பரியம் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்குகிறது என்றார். தேன், திணை, பழவகைகள், சந்தனம் உள்ளிட்ட இயற்கை வளங்களால் சிறப்புப் பெற்ற இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் குழந்தைகளின் கல்வியையும் உயர்த்தவும் அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார். அரசு துறைகளின் கண்காட்சி அரங்குகள் மூலம் மக்கள் அரசுத் திட்டங்களை அறிந்து பயனடைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. உதயகுமார், மாவட்ட வன அலுவலர் கு. சுதாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் காஞ்சனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது பயாஸ் அஹமத், மாவட்ட சுற்றுலா அலுவலர் வே. கார்த்திக், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


All Rights Reserved By TheThavamaniTimes.
Print Save
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter
  • முகப்பு
  • உலகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியம்
  • Reporters
  • Reporter Apply
  • Verify Reporter

Designed By www.Webdigitalway.com
( 9052933264 )