
புதுடெல்லி, அக். 7:
பொது வாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, புதுடெல்லியில் நடைபெற்ற ‘விக்சித் பாரத் சங்கல்ப் சபா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். 2001-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி குஜராத் முதல்வராகப் பதவியேற்றதன் மூலம் தொடங்கிய அவரது அரசுத் தலைமைப் பயணம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, நாட்டின் 140 கோடி மக்களும் ஒன்றிணைந்து இந்த இலக்கை அடைவார்கள் என்று தெரிவித்தார்.
இந்தியாவை உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாற்றுவது, தற்சார்பு இந்தியாவை உருவாக்குவது, இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக உருவாக்குவது, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது, விண்வெளித் துறையில் மேலும் சாதனைகளைப் படைப்பது உள்ளிட்ட இலக்குகளை அவர் முன்வைத்தார்.
2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, “We Will Do It” — “நாம் செய்து காட்டுவோம்” என்ற புதிய முழக்கத்தை முன்வைத்தார்.
தமது 25 ஆண்டுகால அரசுப் பணிப் பயணம் தனிப்பட்ட சாதனைக்கானது அல்ல என்றும், மக்கள் அளித்த நம்பிக்கையும் ஆதரவுமே இந்தப் பயணத்தின் அடிப்படை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.