திருமணமாகி வெளிமாநிலம் சென்ற பெண்களுக்கும் தங்க மோதிரம்!
தமிழக அரசு புதிய அறிவிப்பு
சென்னை: திருமணமாகி வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள், அரசு மருத்துவமனைகளில் குழந்தையைப் பெற்றெடுத்தால், அவர்களின் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் தற்போதைய நிபந்தனைகளின்படி, குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
இந்த நிபந்தனையைத் தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் பிறந்து, திருமணமாகி வெளிமாநிலத்துக்குச் சென்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்திருந்தாலும், அவரது பெற்றோர் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்தால், அந்தக் குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
இதற்காக, குழந்தையின் தாயார் மற்றும் அவரது பெற்றோர் தமிழகத்தில் வசிப்பதற்கான உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த புதிய விதிமுறை ஜூன் 22-ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்குப் பொருந்தும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.