
The Thavamani Times, Published on 08 Julh 2026,
திருவண்ணாமலை | 08.07.2026
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க், செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட மண்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திடீர் கள ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது பள்ளியின் கல்விச் செயல்பாடுகள், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள், வகுப்பறைகள், பள்ளி வளாகத்தின் பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மண்மலை ஊராட்சியில் செயல்பட்டு வரும் சத்துணவு மையத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா, உணவு சமைப்பதற்கான பொருட்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா, மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இருப்பு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பன குறித்து ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
அப்போது பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர், மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அதில், பள்ளி வளாகத்திற்கு அருகில் மிகவும் பழமையான புளியமரம் சாயும் நிலையில் இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து பள்ளிக்குச் செல்வதால், அவர்களின் பாதுகாப்பிற்காக பேரிகார்டு மற்றும் தேவையான பாதுகாப்பு வசதிகளை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.இந்நிகழ்வில் வட்டாட்சியர் முருகன், வட்டாரக் கல்வி அலுவலர் சு. இராமமூர்த்தி, தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் எட்வர்ட், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கண்மணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி உதவி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நடைபெற்ற இந்த ஆய்வு, பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடையே வரவேற்பைப் பெற்றது.









