
The Thavamani Times, Published on 29 June 2026
சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் மூத்த அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், தமிழக மக்களின் அடிப்படை தேவைகளான ரேஷன், குடிநீர், கல்வி, சுகாதாரம், மின்சாரம், சாலை, பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி, மக்களுக்கு விரைவான சேவைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சட்டம்-ஒழுங்கு தொடர்பாக பேசுகையில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுத்து, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பெண்கள் பாதுகாப்பு குறித்து மிகக் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்திய முதலமைச்சர் விஜய், “பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். இதில் ‘No Change, No Compromise’ என்ற கொள்கையுடன் செயல்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை. அதற்குத் தேவையான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், குழந்தைகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்கும் தனி முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஒவ்வொரு பள்ளியையும் சுற்றியுள்ள கடைகள் மற்றும் பகுதிகளை காவல்துறை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், தேவையான நேரங்களில் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்குகளை விரைவாக நடத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மக்கள் அளிக்கும் மனுக்களை கனிவுடன் பெற்று, அவற்றுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில் மட்டும் அமராமல் கள ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இரண்டு நாள் நடைபெறும் இந்த உயர்மட்ட அதிகாரிகள் மாநாட்டில் சட்டம்-ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம், போதையில்லா தமிழ்நாடு, அரசுத் திட்டங்களின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.








